ஞாயிறு, 8 ஜூன், 2014

மோகனம்:- (மோகன ராகம்)

மோகனம்:- (மோகன ராகம்.)

தமிழ் மக்களின் பெருமைகளில் ஒன்று இந்த மோகனம்.

இன்று இந்த ராகத்தில் வந்த பாடல்களிப் பற்றி பார்ப்போம்.

இன்று எனக்கு பிடித்த மோகனராகத்தில் அமைந்த ஒரு பாடலை கேட்டேன், அதுதான் காரணம் இந்த கட்டுரை.

என்னடா இவனுக்கும் ராகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.  எனக்கு ராகங்கள் பற்றிய விஸ்தாரமான அறிவு கிடையாது. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த ராகம் காபி ராகம் தான்.
காரணம் பெயரிலே  வந்து விட்டதே.
காப்பி அடித்து ராகங்கள் என்ன வென்று சொல்லுவேன்.
எனக்கு ராகங்கள் பற்றிய ஆழமான புலமை எப்போதும் & இப்போதும் இல்லை, ஒரு சில ராகங்களில் பரீட்சயம் உண்டு, அவ்வளவுதான். (கேள்வி எல்லாம் கேட்க கூடாது, எப்படி என்று)


மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று. பல் வேறு காலங்களில், பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ராகம் பற்றிய ஆதிக் குறிப்பை தருவது சிலப்பதிகாரமே.

ஆச்சியர் குரவை என்ற பகுதியில், கூத்துள் படுதல் (ஆடத் தொடங்குதல்) 17 வது பாடலில் "அவர் தம் செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோ ஒத்து அந்நிலையே ஆடல்சீர் ஆய்ந்துளார் – முன்னைக் குரல்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருத்து ஒசித்தான் பாடுதும்
முல்லைத் தீம்பாணி என்றாள்" வட்டமாக நின்று ஆயர் மகளிர் கூத்து ஆடும் பொழுது  பாடுதும் முல்லைத் தீம்பாணி என்றாள், என இளங்கோ பாடுகின்றார்.

தென் கோடித் தமிழகத்தில் தொல் மக்களான இடைக்குல சிறுமிகள் துள்ளிக் கூத்தாடிப் பாடி மகிழ்ந்த,  "முல்லைத் தீம்பாணி"  யான மோகனத்தைத்தான் இன்றளவும் அதன் ஆதார சுருதியுடன் பாடி மகிழ்கின்றோம். அதை காப்பாற்றி வருகின்ற இசைக் கலைஞர்களின், மக்களின் நுண் ரசனை போற்றத்தக்கது.

தொன்று தொட்டு மாணிக்கவாசகரின் திருவாசகம்  மோகனராகத்திலேயே பாடப்படுகிறது. விருத்தபாடல்கள் பாடுவதற்கும் பொருத்தமான ராகம் எனக் கருதப்படுகின்றது.

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கான பண்  "முல்லைப்பண்" (மோகனம்) என வகைப்படுத்தப்பட்டாலும், முல்லை நில பண்ணாகவும் கருதப்பட்டது.

சுப ராகம், வர்ணனைக்கேற்ற ராகம் என்றும் எந்த வேளையிலும் பாடக்கூடிய ராகம் என்றும், இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் பிரசித்த ராகம் என்று போற்றப்படுகின்ற ராகமாகும்.
ராகங்களில் ஆண், பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் (பொதுவாக எல்லா மொழி திரைப்படங்களிலும்)  மிகவும் சர்வ சாதாரணமாகப்
பயன் படக்கூடிய ராகங்களில் முதன்மையான ராகம் மோகனம் ஆகும்.

வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர்.

மோகனம் , ஹிந்தோளம் , சிவரஞ்சனி ,சுத்தசாவேரி போன்ற ராகங்கள் 5 சுரங்களைக் கொண்ட ராகங்களாகும். பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் (Pentatonic Scale ragas)
இனிமை மிக்க ராகங்கள் ஆகும். இன்று இந்தியா எங்கிலும் ஒலிக்கின்ற ராகமாகவும் உள்ளது.

அதுமட்டுமல்ல மோகன ராகம்.ஐரோப்பா , ஆபிரிக்கா , அரேபியா போன்ற நாடுகளிலும் ஒலிக்கின்ற ராகம்.


மோகன ராகத்தில் வரும்  சுரங்களில் ‘ரி’ ஐயும்  ‘த’ ஐயும்  மென்மையானதாக  மாற்றினால், அது பூபாளம், என்கிறார்கள். எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாமே.

எனக்கு மிகவும் பிடித்த ராகம் காபி ராகம் தான். காரணம் பெயரிலேயே வந்து விட்டதே.
காப்பி அடித்து ராகங்கள் என்ன வென்று சொல்லுவேன்.
எனக்கு ராகங்கள் பற்றிய ஆழமான புலமை எப்போதும் & இப்போதும் இல்லை. ஒரு சில ராகங்களில் பரீட்சயம் உண்டு  அவ்வளவுதான்.(கேள்வி எல்லாம் கேட்க கூடாது)

ஒரு காலத்தில், வேலையில்லாது இருக்கும் போது (இப்போது என்ன வேலையில் இருக்கிறாயா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது) திருச்செந்தூர் கோவிலில் (சொந்த ஊர் அதானே) இசை கச்சேரி நடக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் சென்று வருவேன். அப்போது சில ராகங்கள் என் மனதை வருடியது. அதில் ஒன்று இந்த மோகனம்.  கச்சேரி செய்த வித்வான்கள்  சொல்லித்தான் தெரியும் மோகனத்தை பற்றி. 
அப்போது, ஒரு பாட்டு வந்தா இது என்ன ராகம் என்று தெரிந்து கொள்ள ஆசை. என் நண்பர்களும் என்னை போலவே காபி மாஸ்டர்கள் தான். ஆனால் ஒரு நண்பன் தாளம் பற்றி நன்கு அறிந்தவன். அவனும் ராகத்தில் பாதி காபி தான். 

அப்போது கூகுள் பிறக்கவில்லை, என்ன செய்ய. 
இசை வித்வானிடம் கேட்டேன், தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய் என்றார். ராகத் தேடலை அப்படியே விட்டு விட்டேன்.

ஆனாலும் இந்த மோகனா என்னை வாட்டி வதைப்பாள். மோகனா என்றால் மோகன ராகம். நீங்கள் தவறாக புரிந்து கொள்ள கூடாது.  எப்படி மோகனத்தின் மேல் ஈடுபாடு வந்தது என்று கேட்கிறீர்களா?
காரணம், இசை கச்சேரி செய்த  சில வித்வான்கள் சொல்லிய பிரபலமான  பாடல்கள் தான் காரணம்.  

அப்படி அவர்கள் சொல்லிய பாடல்களில் சில பாடல்களை பாருங்கள்.

1) தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டு  "நீராரும் கடலுடுத்த நிலமடந்தை"



2) "பழகத் தெரிய வேண்டும்"  – படம் :மிஸ்ஸியம்மா - 1955; குரல்:- ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, இசை:- எஸ்.ராஜேஸ்வரராவ்;

3) "ஆகா இன்ப நிலாவினிலே" - படம் :மாயா பஜார் - 1956; 
குரல்:- கண்டசாலா, பி.லீலா;  இசை:- கண்டசாலா;

4) "காற்று வெளியிடை கண்ணாம்மா"  – படம்:- கப்பலோட்டிய தமிழன் - 1960;  குரல்:- பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா;  இசை:- ஜி.ராமநாதன்;

5) "நிலவும் மலரும் பாடுது" - படம்:- தேன் நிலவு - 1960; 
குரல்:- ஏ.எம்.ராஜா, பி.சுசீலா; இசை:- ஏ.எம்.ராஜா;

6) ஆலயமணியின் ஓசையை நான்" – படம்:- பாலும் பழமும் – 1961;
குரல்:- பி.சுசீலா;  இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி;

7) "வந்த நாள் முதல்" – படம்:- பாவமன்னிப்பு - 1961; 
குரல்:-  TMS ;  இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி;

8) "மலர்கள் நனைந்தன பனியாலே" – படம்:- இதயக்கமலம் - 1965; 
குரல்:- பி.சுசீலா; இசை:- கே.வி.மகாதேவன்;

9)  "புதிய வானம் புதிய பூமி" – படம்:- அன்பே வா - 1967; 
 குரல்:- TMS;   இசை:M.S.விஸ்வநாதன்;

10) "ஒரு ராஜா ராணியிடம்" – படம்:- சிவந்த மண்  -1968; 
 குரல்:- TMS, பி.சுசீலா;  இசை:- M.S.விஸ்வநாதன்;

11) "திருச்செந்தூரின் கடலோரத்தில்"  - படம் : தெய்வம் - 1972; 
குரல்:- TMS,  சீர்காழி கோவிந்தராஜன்;  இசை:- குன்னக்குடி வைத்தியநாதன்;

12) "பன்சாயி காதல் கவிதைகள்" - படம்:- உலகம் சுற்றும் வாலிபன் - 1973; 
குரல்:- TMS, L.R.ஈஸ்வரி;  இசை:- M.S.விஸ்வநாதன்;

13) "தங்கத் தோணியிலே" – படம்:- உலகம் சுற்றும் வாலிபன் – 1973; 
குரல்:- கே.ஜே.ஜேசுதாஸ்,  பி.சுசீலா;  இசை:-.M.S.விஸ்வநாதன்;

14) "நமது வெற்றியை நாளை" – படம்:- உலகம் சுற்று வாலிபன் – 1973;
குரல்:- சீர்காழி கோவிந்தராஜன்,  இசை:- M.S.விஸ்வநாதன்;

இப்படி அனைவரின் மனம் கவர்ந்த பாடல்கள் மோகனத்தில் வந்தவை என்று இசை ஜாம்பவான்கள் சொல்லும் போது எனக்கு எப்படி மோகனத்தின் மீது ஈடுபாடு வராதிருக்க முடியும்? நான் மேலே சொன்னது கொஞ்சம் தான். 
இன்னும் நிறைய இருக்கு.

மனம் கவர்ந்தும், நான் மோகனத்தை தேடி போகவில்லை.  காரணம் எனக்கு கேள்வி ஞானம் மட்டும் தான் உண்டு.  

இனி இசைஞானி இளையராஜாவின் மோகனம் பற்றி பார்ப்போம்.
15) கண்ணன் ஒரு கைக் குழந்தை;
16) மீன் கொடித் தேரில் மன்மதராஜன்;
17) கண்மணியே காதல் என்பது;
18) நிலவு தூங்கும் நேரம்;
19) பூவில் வண்டு கூடும்;
20) ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு;
21) தேன் மல்லிப் பூவே;
22) கீதம் சங்கீதம் நீ தானே;
23) பொன்னாரம் பூவாரம்;
24) இரு பறவைகள் மலை முழுவதும்;
25) நின்னுக் கோரி வர்ணம்;
26) வான் மேகங்களே வாழ்த்துங்கள்;
27) கஸ்தூரி மானே கல்யாண தேனே;
28) வான் போலே வண்ணம் கொண்டு;
29) இதயம் ஒரு கோயில்;
30) என்ன சமையலோ;  (படம் :உன்னால் முடியும் தம்பி)
31)  ஒரு ராகம் பாடலோடு காதில்;
32) ஏ.பி.சி .. நீ வாசி ;
33) வா வா வஞ்சி இள மானே....

இன்னும் நிறைய உள்ளன..

என்ன, எப்படி ,மோகனம்??? உங்களுக்கும் பிடிக்குதா??  

இப்படி பல வெற்றிப் பாடல்கள் உள்ளன. வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பது போல தமிழ் சினிமாவில் மோகன ராகத்தால் பாடல்கள் நிறைக்கப்பட்டுள்ளன. மெல்லிதான திரையை விலக்கினால் மின்னி ஜொலிக்கின்ற வைரங்கள் போல ஏராளம் பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.

இளையராஜா வருகை தமிழ் சினிமாவில் நிகழ்ந்த இசை நூதன நிகழ்வு (Music Phenomenon) மண் சார்ந்த இசை செல்வத்தை வழங்கும் ஒரு பேராற்றல் மிக்க கலைஞனை மக்கள் அடையாளம் கண்டு கொண்டாடினர்.
இளையராஜா தமிழக நாட்டுப்புற இசையின் ஆன்மாவை காட்டிய விதம் பன்மடங்கு நாட்டுப்புற பாடல்கள், இசைப்பாடகர்கள், வெளிவரக் காரணமாயிற்று. "எல்லாம் வெறும் தன்னானே தானே” என்று இகழ்ந்த நாட்டுப்புற இசைக்கு மவுசு ஏற்ப்பட்டது.
MSV -க்கு பிறகு இளையராஜா தான் இந்த மோகனத்தை அதிகம் பயன்படுத்தினார். 

 தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் , அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல்மூதாட்டியான நமது  மோகனம்.

தமிழ் மக்களின் பெருமைகளில் ஒன்று இந்த மோகனம்.